மேற்குவங்கத்தில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் மீண்டும் துவங்கியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து கறிக்கோழிகளை இறக்குமதி செய்வதற்காக ஏற்கனவே விதித்திருந்த தடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.ஈ.) நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக கல்ஃப் நியூஸ் நாளிதழுக்கு துபாய் நகர சபை மூத்த அதிகாரி கூறுகையில், இந்தியா உட்பட ஆசியா நாடுகளில் இருந்து புதிதாக கோழிகளை இறக்குமதி செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் என்றார்.
இந்தியாவில் கடந்த 2006இல் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளான இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஏராளமான கோழிகள் அழிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்ய யு.ஏ.ஈ. தடைவிதித்தது.
தற்போது மேற்குவங்கத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்திய கோழிகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை யு.ஏ.ஈ. நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.