இந்தோனேசியாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து தாக்கிய பூகம்பங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த பூகம்பம் காரணமாக தென்கிழக்கு ஜப்பானில் சிறிய அளவில் சுனாமி பேரலைகள் எழும்பியது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் பப்புவா என்ற இடத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.15 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆகப் பதிவானதாக ஜகார்த்தாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவுக்கு மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் 10 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. தொடர் நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், இதில் சிக்கி 19 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடுமையான நிலநடுக்கத்தால், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனிடையே தென்கிழக்கு ஜப்பானில் இன்று காலை 4 அங்குலம் முதல் 16 அங்குலம் வரையிலான உயரம் கொண்ட சுனாமி பேரலைகள் எழும்பியதாகவும், சிறிய அளவிலான சுனாமி தாக்கியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக சேதம் எதுவும் இல்லை என்ற போதிலும் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் கடந்த 2004ஆம் ஆண்டு தாக்கிய பூகம்பத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தைவான் நாட்டிலும் இன்று காலை ரிக்டர் அளவுகோளில் 5.1 என்ற அளவில் பதிவான பூகம்பம் தாக்கியதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.