மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்த ஆதாரங்களை இந்தியா பகிர்ந்து கொண்டால், தாக்குதலுக்கு காரணமான தேசச்சார்பற்றவர்கள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கும் என அந்நாட்டு அதிபர் ஆஃசிப் அலி சர்தாரி அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு நேற்று வந்திருந்த அமெரிக்கத் தூதர் ஏன்னி பீட்டர்சன், அந்நாட்டு அதிபர் சர்தாரியை சந்தித்துப் பேசினார். இருவரது பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், இருதரப்பு உறவுகள், தற்போதைய சூழல் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தை தணிக்கவே அமெரிக்கத் தூதர், அதிபர் சர்தாரியை சந்தித்துப் பேசியுள்ளார் என இஸ்லாமாபாத்தில் உள்ள தூதர்கள் கருதுகின்றனர்.
இச்சந்திப்பின் போது மும்பை தாக்குதல் தொடர்பான கூட்டு விசாரணைக்கு இந்தியா முன்வர வேண்டும் என்றும், அதைவிடுத்து தொடர்ந்து தங்களை குறை கூறிக் கொண்டிருந்தால் அமைதி நடவடிக்கைகள்தான் பாதிக்கப்படும் என சர்தாரி கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய, பாகிஸ்தானிய தலைவர்களுடன் தொடர்ந்து அமெரிக்கா தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ள பீட்டர்சன், போர்ப் பதற்றத்தை தணிக்கும் பேச்சுகளுக்கு ஆஹ்தரவு தொடரும் என்றும் கூறியுள்ளார்.