தற்காப்புத் தாக்குதல்களின் போது ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கியுள்ளதாக அவர்களின் ஆதரவு இணைய தளமான தமிழ்நெட் கூறுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் என்று கூறப்படும் கிளிநொச்சி நகரத்தை சிறிலங்கப் படையினர் கைப்பற்றிவிட்டதாக இன்று (வெள்ளி) மாலை 4.15 மணியளவில் அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்துத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், தற்காப்புத் தாக்குதல்களின் போது ஏற்படும் இழப்புக்களைத் தவிர்க்கவே விடுதலைப் புலிகள் பின்வாங்கியுள்ளனர் என்று கூறியதாகத் தமிழ்நெட் இணைய தளம் கூறுகிறது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, 1996இல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த கடுமையான மோதலில் 600க்கும் மேற்பட்ட படையினரை இழந்த பிறகு, கிளிநொச்சி- பரந்தன் பகுதிகளை சிறிலங்கப் படையினர் கைப்பற்றினர். அதன்பிறகு 1998 பிப்ரவரியில் கிளிநொச்சியின் ஒரு பகுதியை விடுதலைப் புலிகள் மீட்டனர்.
சில மாதங்களுக்குப் பிறகு 1998 செப்டம்பரில், 'ஓயாத அலைகள்-2' என்ற பெயரில் அதிரடித் தாக்குதல் நடத்தி 15 கிலோ மீட்டர் நீளமுள்ள பரப்பை இரண்டே நாட்களில் சிறிலங்கப் படையினரிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர்.
அப்போது, பரந்தனில் குவிக்கப்பட்டிருந்த படையினர் விடுதலைப் புலிகளுடன் சமரசம் செய்து பின்வாங்கினர். ஆனையிரவு முகாமில் சிறிலங்கப் படை குவித்திருந்த பெருமளவிலான வெடி பொருட்களும் அழிக்கப்பட்டது.
'ஓயாத அலைகள்-2' தாக்குதலில் பலியான 1,000க்கும் மேற்பட்ட படையினரின் சடலங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.