தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை சிறிலங்க இராணுவம் கைப்பற்றிவிட்டதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட தகவலை நாட்டிற்கு அறிவித்து இன்று மதியம் உரையாற்றிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, "தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தளமாகக் கருதப்பட்ட கிளிநொச்சியை எமது படையினர் சிறிது நேரத்திற்கு முன்பு கைப்பற்றியுள்ளனர். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பயங்கரவாத இயக்கம் என்று சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள, எமது சொந்தத் தலைவர்களால் வர்ணிக்கப்படுகிற தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையை எமது படையினர் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர்." என்று கூறினார்.
மேலும், "வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத உண்மையான ஈடில்லாத வெற்றி இது. எமது படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியக் கோட்டையை மட்டும் கைப்பற்றவில்லை; பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் நடத்தி வரும் போரில் முக்கிய வெற்றியையும் எட்டியுள்ளனர். சிறிலங்கப் படையினரின் ஈடில்லாத வெற்றியை ஒட்டுமொத்த உலகும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டுச் சரணடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன், படையினரின் வெற்றி வரலாற்று ரீதியானது என்றும் புகழாரம் சூட்டினார் மகிந்த ராஜபக்ச.