தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது கடினம், ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சு நடத்தினால் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தி விடலாம் என்று அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, கொழும்புவில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடச் செய்வது பேச்சில் வேண்டுமானால் சாத்தியம். ஆனால் அவர்களை முழுமையாகத் தோற்கடித்துவிட முடியாது.
அரசு பேச்சு நடத்துகிறதா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் அரசு அப்படிப்பட்ட திட்டத்தில் இல்லை என்று தெரிகிறது. அதேநேரத்தில் விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ்த் தரப்பிடம் பேச்சு நடத்தி ஒரு தீர்விற்கு அரசு முன்வரலாம். இதில் வெற்றிபெற்றுவிட்டால் புலிகளைத் தனிமைப்படுத்தி விடலாம்.
இராணுவ வழித் தீர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. அரசியல் வழியிலான தீர்வை முன்வைக்காத வரையில் பொதுமக்கள்- உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள். அரசியல் தீர்வை இப்போது முன்வைத்தால் புலிகளை ஒடுக்க உதவியானதாக இருக்கும்.
சர்வதேசச் சமூகத்துடனான சிறிலங்காவின் உறவுகள் நல்ல முறையில் உள்ள போதும் வடக்கு பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் கவலை தெரிவித்திருந்தார். வடபகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஐ.நா. சபை குழுவை அப்பகுதிக்கு அனுப்பி நிலைமையை அறிய அரசு உதவ வேண்டும் என்றார் அவர்.