Publish Date: Fri, 02 Jan 2009 (12:48 IST)
Updated Date: Fri, 02 Jan 2009 (12:48 IST)
கிளிநொச்சியில் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான நேற்று சிறிலங்க விமானப்படை 3 முறை நடத்திய குண்டுவீச்சில் அப்பாவிப் பொது மக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை வெளிக்கண்டல் பகுதியில் உள்ள பொது மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கும், முற்பகல் 11.30 மணிக்கும், பின்னர் பிற்பகல் 4.30 மணிக்கும் என மூன்று முறை சிறிலங்க விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன என்று விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய தளமான புதினம் தெரிவிக்கிறது.
இதில் பெண் ஒருவர் உட்பட பொது மக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 17 வீடுகளும் 9 கடைகளும் முற்றிலும் அழிந்துள்ளன. பயணிகள் பேருந்து ஒன்றும் சேதமடைந்துள்ளது.
முன்னதாக, முரசுமோட்டையில் உள்ள பொது மக்கள் குடியிருப்புகள் மீது கடந்த புதன்கிழமை சிறிலங்க விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.