மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் இருந்தால் அவர்களை தண்டிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டான் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புஷ் அரசு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானில் இருந்தால் அவர்களை இந்தியாவின் வசம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி வந்த அமெரிக்கா, தற்போது பாகிஸ்தான் அரசே அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக் ‘பல்டி’ அடித்துள்ளது.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தில் அமெரிக்க அதிகாரிகள் துவக்கத்தில் உறுதியாக இருந்தாலும், லஷ்கர்-ஈ-தயீபாவின் முக்கிய தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு உள்ள சிக்கல்களை அவர்கள் புரிந்து கொண்டதாகவும், அதன் காரணமாகவே தற்போது தங்கள் நிலையில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ளதாகவும் டான் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.