இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது அணு உலைகள் விவரம் அடங்கிய பட்டியலை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் முக்கிய எரிசக்தி ஆதாரங்களாக விளங்கும் அணு உலைகள் மீது போர்க் காலத்தில் தாக்குதல் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் இந்தப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணு உலைகளின் பட்டியலை ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதி பரிமாறிக்கொள்வது என இரு நாடுகளும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. கடந்த 1988இல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 1991 முதல் அமலில் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் தங்கள் நாட்டு அணு உலைகள் பட்டியலை இன்று காலை 11 மணிக்கு ஒப்படைத்தனர். அதேபோல் புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இந்தியாவில் உள்ள அணு உலைகளின் பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் இரு நாடுகளிலும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இந்திய, பாகிஸ்தானியப் பிரஜைகள் பற்றிய புதிய பட்டியலும் இரு நாடுகளிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.