மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கஸாப் கிராமத்தில் அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பின் (Federal Bureau of Investigation-FBI) அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியுள்ளனர்.
அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பின் தெற்காசிய இயக்குனர் வில்லியம் ராபர்ட் தலைமையிலான 5 அதிகாரிகள் கொண்ட குழு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஃபரிட்கோட் கிராமத்தில் அஜ்மல் கஸாப் குறித்து விசாரணை மேற்கொண்டதாக ஜியோ தொலைக்காட்சி இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு அங்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்றும் யாரையும் மேற்கோள்காட்டாமல் ஜியோ தொலைக்காட்சி கூறியுள்ளது.
அஜ்மல் கஸாப் எனது மகன்தான் என ஃபரிட்கோட் கிராமத்தில் உள்ள அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் பகிரங்கமாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தினாலும், பாகிஸ்தான் அரசு அத்தகவலை தொடர்ந்து மறுத்து வருகிறது.
மேலும், சட்ட உதவி கோரி கஸாப் எழுதிய கடிதமும் அவர் எழுதியதா? என பாகிஸ்தான் அரசு சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழு கஸாப் கிராமத்தில் விசாரணை நடத்தியுள்ளது.