மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான அஜ்மல் கஸாப் எழுதியதாக இந்தியா அளித்த கடிதம் உண்மையானது தானா? என பாகிஸ்தான் அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய தகவல் தொகுப்பு, பதிவு ஆணையத்தின் தலைமையகத்திற்கு நேற்று வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செயலர் சையத் கமல் ஷா, அஜ்மல் எழுதியதாகக் கூறிய கடிதத்தில் உள்ள கருத்துகள் உண்மையான பாகிஸ்தானியர் எழுதியதைப் போல் இல்லை என்று சந்தேகம் தெரிவித்தார்.
ஒரு விடயத்தை ஜோடிப்பதற்காக அவர்கள் (இந்தியர்கள்) முயன்றுள்ளனர். ஆனால் அதிலும் தோல்வியைச் சந்தித்துள்ளனர் என்று கூறிய கமல் ஷா, அஜ்மல் கஸாப் குறித்த எந்தத் தகவலும் பாகிஸ்தான் தேசிய தகவல் தொகுப்பு மையத்தில் இல்லை என்றார்.
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 16 கோடியாகும். ஆனால் அந்நாட்டு தேசிய தகவல் தொகுப்பு மையத்தில் வெறும் 60 லட்சம் மக்கள் குறித்த தகவல்களே இடம்பெற்றுள்ள நிலையில் கமல் ஷா தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அஜ்மல் கஸாப், தனக்கு சட்டஉதவி வேண்டும் எனக் கோரி பாகிஸ்தான் அரசுக்கு எழுதிய கடிதத்தை கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா அந்நாட்டிடம் வழங்கிய நிலையில் அக்கடிதத்தின் மீது பாகிஸ்தான் சந்தேகம் எழுப்பியுள்ளது.
மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு வாரத்திற்கு உள்ளாகவே கஸாப் தனது மகன்தான் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பரிட்கோட் கிராமத்தைச் சேர்ந்த அவரது தந்தை உலகிற்கு பகிரங்கப்படுத்தினார். எனினும், அதனை உண்மை என்று ஒப்புக்கொள்ள பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.