Publish Date: Tue, 30 Dec 2008 (12:41 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (12:41 IST)
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார இதழிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் பேட்டி எதையும் வழங்கவில்லை என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்ததாக புதினம் இணைய தளம் கூறுகிறது.
இது குறித்துத் தனது செய்திப் பிரிவிடம் பா. நடேசன் தெரிவித்ததாகப் புதினம் இணைய தளம் தெரிவிப்பதாவது:
கொழும்புவிலிருந்து வெளிவரும் ஆங்கில ஞாயிறு ஏடான "லக்பிம" தனது நேற்றைய (28.12.2008) வெளியீட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் தமக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக பேட்டி என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக, விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனை "புதினம்" தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அதனை மறுத்தார்.
"லக்பிம" வார ஏட்டுக்கான இந்தப் பேட்டி தன்னால் வழங்கப்பட்ட ஒன்று என்றும், அதனை அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டியாக வெளியிட்டு விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்னர் கூட தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "நக்கீரன்" இதழும், நடேசனால் வழங்கப்பட்ட பேட்டியை, தலைவர் பிரபாகரன் அவர்களின் பேட்டி என வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
இவ்வாறு புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
Webdunia
Publish Date: Tue, 30 Dec 2008 (12:41 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (12:41 IST)