இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் காஸா பகுதியில் மேற்கொண்டு வரும் ராணுவ தாக்குதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
காஸாவில் நிகழ்ந்து வரும் கோரச் சம்பவங்களுக்கு ஆழந்த வருத்தத்தை தெரிவித்த 15 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு சபை, தேவையான உணவு, மருத்துவ உதவியை காஸா பகுதிக்கு அளித்திட எல்லைகளை இரு நாடுளும் திறக்க வேண்டும் எனக் வலியுறுத்தியது.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவு உயிர்ச் சேதத்தை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரபு நாடுகளின் சார்பில், ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என லிபியா விடுத்த வேண்டுகோளை ஏற்று நேற்றிரவு ஐ.நா பாதுகாப்பு சபைக் கூட்டப்பட்டது.
சுமார் 4 மணி நேரம் நடந்த இக்கூட்டத்திற்குப் பின்னர் ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்ட அறிக்கையில் ஹமாஸ் சட்டப்படி போர் நிறுத்த அறிவிப்பை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண புதிய போர் நிறுத்த உத்தரவு வழிவகுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் எல்லை நகரங்கள் மீது காஸா தொடர்ந்து ராக்கெட் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்த இஸ்ரேல் கடந்த 27ஆம் தேதி ராணுவ நடவடிக்கையில் இறங்கியது.
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலுக்கு தற்போது வரை 296 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.