வடக்குப் போர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் கடந்த சில நாட்களிலேயே 500க்கும் மேற்பட்ட சிறிலங்கப் படையினர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரமான ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இதுகுறித்துக் கொழும்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் கடந்த சில நாட்களில் 500 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதே அளவிலான படையினர் படுகாயமடைந்து உள்ளனர். ஆனால், அவர்களுக்கு உரிய சிகிச்சையை அரசு வழங்கவில்லை. எனவே உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றன" என்றார்.
மேலும், தனது ஆட்சிக் காலத்தில் படையினருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக 12 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அதில் 2 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.
"மழைக்காலப் போரில் கடல் வழியாக படைப் பொருட்களை வழங்குவது என்பது சிக்கலானது. எனவே படையினருக்கு வான்வழி வழங்கலே தேவை. ஆனால் விமானங்கள் அந்த நடவடிக்கைகளில் இறக்கப்படவில்லை" என்றார் அவர்.