Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு சிங்கள போர் வீரனின் கதை!

ஒரு சிங்கள போர் வீரனின் கதை!
, சனி, 27 டிசம்பர் 2008 (19:09 IST)
webdunia photoFILE
தனது மூச்சை அவன் இன்னும் சிறிது நேரம் தக்கவைக்க வேண்டும். இல்லை என்றால் அவன் தனது சகாக்களின் சடலங்களுடன் அப்புறப்படுத்தப்படுவான். எட்டு சடலங்களுடன் மூச்சிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அவனது கைகளிலும் கழுத்திலும் பயங்கரமான காயங்கள் இருந்தன.

மகிந்த ராஜபக்ச அரசின் தனிப் பெரும்பான்மை கனவிற்காமூர்க்கமாகச் சண்டையிடும் ஆயிரக்கணக்கான சிறிலங்கப் படையினருள் ஒருவனான அவன், தற்போது தனக்கு எதிராகப் போரிடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மனிதநேயத்திற்கு நன்றி சொல்லும் அதிர்ஷ்டமான வாய்ப்பை பெற்றுள்ளான்.

நாகர்கோவில் - முகமாலை - கிளாலி முனை இன்னும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், டிசம்பர் 16 அன்று அதிகாலை 1.30 மணிக்கு மோதல் தொடங்கியது. சிங்களப் படையின் 53ஆவது படை அணியின் 2 பிரிகேடுகள் பிரிகேடியர் கமல் குனாடட்னே தலைமையில், கிளாலி முனையில் உள்ள முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியாக வேண்டும் என்று கடுமையாகப் போராடியது. அடுத்த ஒன்பது மணி நேரம் நடந்த நீண்ட கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள், சிங்களப் படையினரை பேரிழப்புகளுடன் பின்வாங்கச் செய்தனர்.

மோதலில் பலியான சிங்களப் படையினரின் சடங்களை மீட்டபோது, அதில் ஒருவருக்கு இன்னும் மூச்சு இருப்பதை மாலை 7 மணியளவில் கண்டறிந்த விடுதலைப் புலிகள், அவருக்கு உடனடியாக முதல் உதவிகளை அளித்து, நினைவு திரும்பிய பிறகு குடிநீர் தந்தனர்.

தங்களிடம் அகப்பட்ட சிங்கப் படையினனை இறக்க விடாமல், தங்களில் ஒருவனைப் போலப் பாவித்து, வடக்கு முனைகள மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவின் நற்பண்புகளைப் பாராட்டியே தீர வேண்டும். அந்தப் படையினன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அந்த இளம் படையினன் ஆர். ஏ. நிசான் ரணசிங்கே (வயது 22), அனுராதபுரம் பகுதியில் வசிக்கும் அவர் "சின்ஹா ரெஜிமெண்ட்"- இல் இணைந்திருந்தார். தியாதலவா இராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அந்த இளைஞன் வலுக்கட்டாயமாக போர் முனையில் தள்ளப்பட்டிருந்தார். கள நிலவரம் குறித்து எதுவுமே தெரியாத அவர், போர் முனையில் தள்ளப்பட்டு சண்டையிடுமாறு பணிக்கப்பட்டிருந்தார்.

பெரும்பாலான சிங்களப் படையினர் முறையான பயிற்சி இன்றி போருக்குத் தள்ளப்படுகின்றனர். நவீன இராணுவத்தில் ஒவ்வொரு படையினரும் எந்தப் பயிற்சியையும் பெறுவதற்கு முன்பு அடிப்படைப் போர்ப் பயிற்சியைப் பெற வேண்டும். அப்போது அவர்கள், போருக்குத் தம்மை எப்படித் தயார்படுத்திக் கொள்வது, களமுனை உத்தரவுகளை எப்படி நிறைவேற்றுவது, தான் சார்ந்த அணியில் எப்படித் தன்னை பிணைத்துக் கொள்வது ஆகியவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் ரணசிங்கே, கடந்த நவம்பர் 25 அன்று தனது இராணுவப் பயிற்சியை முடித்த பிறகு உடனடியாக போர் முனைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தற்போது விடுதலைப் புலிகளிடம் போர்க் கைதியாக உள்ள அவர், கிளிநொச்சி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தான் பொருளாதார தேவைக்காக இராணுவத்தில் சேர்ந்ததாகவும், உடனடியாகப் போர் முனைக்கு அனுப்பப்படுவோம் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி இராணுவத்தில் சேர்ந்த ரணசிங்கே, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 693 பேருடன் போரைச் சந்தித்தல் மற்றும் ஆயுதங்களைக் கையாளுதல் தொடர்பான பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மூன்று மாத கால கடுமையான பயற்சிக்குப் பிறகு, கிளாலி முனையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த 53 ஆவது அணியில் இணைக்கப்பட்டார். தனது பயிற்சியை முடித்த 15 நாட்களுக்குள் ரணசிங்கே மிகப்பெரிய போர் நடவடிக்கையில் தள்ளப்பட்டுள்ளார்.

டிசம்பர் 16 அன்று அதிகாலை 2.30 மணியளவில், முன்நகர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு எதிரியைச் சந்திக்குமாறு பணிக்கப்பட்ட படையினருள் இவரும் ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமையான எதிர்த் தாக்குதலிற்கு நடுவே, பின்வாங்கும் உத்தரவுகள் வந்தன. ஆனால், ரணசிங்கே காயமடைந்து, காலை 6.30 மணி முதல் சுமார் 12 மணி நேரம் களத்திலேயே கிடந்தார். அவரை மீட்பதற்கு சிங்களப் படையினர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

"நான் காயமடைந்து களத்தில் விழுந்த பிறகு என்னுடன் போரிட்ட வீரர்கள் யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. கொல்லப்பட்ட படையினரின் சடலங்களுக்குள் கிடந்த என்னை தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டுபிடித்து, சிகிச்சை அளித்து, எனது உயிரைக் காப்பாற்றினர்.

சம்பளம் அதிகம் என்பதாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் போர் முனைக்கு அனுப்பப்படுவேன் என்று உறுதி அளிக்கப்பட்டதாலும்தான் நான் இராணுவத்தின் சேர்ந்தேன். ஆனால், இராணுவத்தில் சேர்ந்த சிறிது காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டதுடன், அடுத்த ஆறு நாட்களுக்குள் போர் முனைக்குத் தள்ளப்பட்டேன்.

என்னைப்போல இன்னும் பல இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போரில் பங்கேற்ற 35 பேர் கொண்ட பிளாட்டூனில் நானும் ஒருவன். இராணுவத்தில் சேர்ந்த பிறகுதான் எனக்குச் சூழ்நிலை தெரியும்.

நாங்கள் கிளாலி போர் முனைக்கு அழைத்து வரப்பட்டோம். 35 பேர் கொண்ட குழுவில் இருந்து நாங்கள் 4 பேர் மட்டும் பிரிந்து வந்தோம். மற்ற மூன்று பேருக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை." என்று ரணசிங்கே வன்னியில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்த் திறன் அல்லது வலிமை பற்றி எதுவுமே தெரியாமல், அரசின் அரசியல் வெற்று விளம்பரங்கள் மூலம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்தச் சண்டையில் சிங்களப் படை வென்றுவிடும் என்று கூறி இந்த இளம் படையினர் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

சிங்களப் படை நிச்சயமாக வெற்றி பெறும் என்றும், இந்தப் போர் வெற்றிப் போர் என்றும் இந்த இளைஞர்களுக்கு உறுதியளிக்கப்படுகிறது. தோல்வி அடைவோம் என்று தெரிந்தும், எதுவுமே தெரியாத அனுபவம் இல்லாத இளைஞர்களைமேலும் மேலும் படையில் சேர்த்துக் கொண்டு, ஊடகங்களின் மூலம் சிங்கள அரசுதான் வெற்றிபெறும் என்ற தவறான செய்திகளைப் பரப்பி உண்மையை மறைக்க சிங்கள அரசு போரிடுகிறது.

போர் முனைகளில் சுதந்திரமான செய்தியாளர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. போர் முனை இழப்பு விவரங்களும் சிங்கள அரசு தெரிவிப்பதைவிட மிகவும் அதிகமாகவே உள்ளன. படுகாயமடைந்த படையினரில் பெரும்பாலானவர்கள் தங்களின் கைகளையும், கால்களையும் பார்வைகளையும் இழந்துள்ளனர். மற்றவர்கள் கேட்கும் திறனை இழந்து உள்ளனர். கிளிநொச்சியில் போரிட்டு வரும் படையினரில் பலர் வாய்மூடி மெளனம் சாதிக்கின்றனர்.

மிகவும் கடினமான நிலையில் இருந்தாலும், சிங்களப் படையினர் தங்களின் பொய்ப் பிரச்சார உத்திகளைத் தொடர்ந்து கடைபிடிக்கின்றனர். போர் முனையில் இருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல என்பதையே கள விவரங்கள் தெரிவிக்கின்றன. சிறுவர்களையும் சிங்களப் படையினர் விட்டு வைக்கவில்லை. வேறுபல பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் சிறுவர்கள் பல நேரங்களில் போர் முனைக்கும் அனுப்பப்படுகின்றனர்.

சிங்களப் படையினரில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் நசிந்தவர்கள். முறையான கல்வி வாய்ப்புக்களும், வேலை வாய்ப்புக்களும் இல்லாததால் கிராமப்புறங்களில் வசிக்கும் சிங்கள இளம் பெண்களும், இளைஞர்களும் இராணுவத்தில் சேர்ந்து விடுகின்றனர்.

இந்தப் படையினர் தங்களின் பெற்றோரிடம், "கவலைப்படாதீர்கள் அம்மா, அப்பா... நாங்கள் நேரடியாகப் போர் முனைக்கு அனுப்பப்பட மாட்டோம்" என்று சொல்லிவிட்டு வருகிறார்கள். ஆனால், ஒன்றும் தெரியாத, புதிதாகப் படையில் சேர்க்கப்பட்டவர்கள் உடனடியாக போர் முனையில் தள்ளப்பட்டு, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போரிடுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.

இராணுவத்தின் கொடூரக் குணங்களால் இந்தப் போரில் இதுவரை 25,000 படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவக் காவலர்கள் சிங்களர்களின் வீடுகளுக்குள் சரமாரியாக நுழைந்து, அங்குள்ள இளைஞர்களைக் கைது செய்து பூசா தடுப்பு முகாமில் அடைத்துள்ளன‌ர்.

ரணுசிங்கே வாழ்வதற்கு விரும்புகிறார். இவரது கதை முறையான இராணுவத்திற்கும், அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட இராணுவத்திற்கும் உள்ள வித்தியாசத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். "இது அரசின் ஆயுளைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போர்" என்று இந்தப் போரைப்பற்றி படையினரின் ஒருவரின் அண்டை வீட்டார் சொன்னதுதான் நிதர்சனம்.

Share this Story:

Follow Webdunia tamil