"கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிறிலங்கப் படைகள் விடாப்பிடியாக முயற்சி செய்து வருகின்றன. கிளிநொச்சியை பாதுகாத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாகப் போரிடுகிறது" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து 'குமுதம்' வார இதழிற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், "கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத் தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது.
ஒரு முனையில் தாக்குவதால் பயனில்லை; பல முனைகளில் களங்களைத் திறந்து ஒரே சமயத்தில் தாக்குவதன் மூலம் நகரைப் பிடிக்கலாம் என சிங்களப் படைகள் கருதியிருந்தன. சிங்களப் படையின் இந்தப் புதிய வியூகத்தையும் புலி வீரர்களும், வீராங்கனைகளும் இப்போது முறியடித்து விட்டனர்" என்று கூறியுள்ளார்.
ஒழிந்துகொள்ள வேறு இடம் இல்லாமல் கடலுக்குள் சென்றுதான் புலிகள் தற்கொலை செய்யவேண்டும் என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்து பற்றிய கேள்விக்கு, "புலிகள் இயக்கம் கடலுக்குள் குதித்து அழிய வேண்டும் அல்லது சயனைட் அருந்தி சாகவேண்டும் என்று சிங்கள பேரினவாதிகள் ஆசைப்படுகின்றனர். இதேபோன்ற கருத்தை முன்னர் சந்திரிகா காலத்தில் அதன் இராணுவ அமைச்சராக இருந்த ஜெனரல் ரத்வத்தவும் கூறியிருந்தார்.
இதேபோன்றுதான் பண்டைய சிங்கள மன்னான துட்டகைமுனுவும் தமிழர்களை கடலுக்குள் தள்ளியழிக்க ஆசைப்பட்டிருந்தான். இனவாத மரபு சார்ந்த இராணுவ ஆசைகள் நிறைவேற புலிகள் இயக்கமும் எமது மக்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார் நடேசன்.
தமிழகம் உட்பட உலகம் முழுக்க சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ள புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் குறித்த கேள்விக்கு,"நாங்கள் விடுதலைக்காகப் போராடும் ஓர் இயக்கம். உண்மையும் நேர்மையும் தான் எங்களுக்கு ஆதாரம். பொய்களும் புனைகதைகளும் எங்களுக்கு புதியவையல்ல. அது ஆக்கிரமிப்பு அரசுகளுக்கு பெரியவை. ஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடக்கின்றது. அதற்கெதிராக ஒரு விடுதலைப் போரும் நடக்கின்றது. இந்த அரசியல் உண்மையை கடந்த முப்பது வருடங்களாக உலகிற்கு நாங்கள் தெரியப்படுத்திவருகின்றோம். இப்போதும் அதையே செய்து வருகின்றோம்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் பற்றிய கேள்விக்கு, "இந்தியா ஒரு பலமான நாடு மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்தின் வல்லரசுமாகும். இந்திய அரசு நினைத்தால் அதிகாரத்தையும் - செல்வாக்கையும் பிரணாப் முகர்ஜியுடாக பயன்படுத்தி போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி அரசியல் பேச்சு நடைபெறுவதற்கான புறச்சூழல் ஒன்றையும் உருவாக்க முடியும். இந்தப் பிராந்தியத்தின் பெரு அரசு என்ற வகையில் இதைச்செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டென்பதும் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்" என்று நடேசன் கூறியுள்ளார்.
புலிகளின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு பற்றிய கேள்விக்கு, "நாம் உலகின் சகல நாடுகளிடமும் அரசியல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த விரும்புகின்றோம். குறிப்பாக இந்திய அரசுடனும் எமது நட்புறவை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகின்றோம்" என்று அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.