அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், அணு ஆயுதத்தை பாகிஸ்தான் முதலில் பயன்படுத்தாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சௌத்ரி அகமது முக்தார் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் பேசிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதத்தை பிரயோகிக்காது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சௌத்ரி, அணு ஆயுதத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. எனவே போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதத்தை பிரயோகிக்காது என்றார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தாமல் பொறுமை காக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ உயரதிகாரி அட்மிரல் மைக் முல்லன் அறிவுறுத்தியதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் சௌத்ரியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், பாகிஸ்தானின் எல்லைகள், இறையாண்மையை பாதுகாப்பது குறித்து யாரும் எங்களுக்கு அறிவுறுத்தத் தேவையில்லை. பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதிக்குள் இந்தியா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் சரியான பதிலடி கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.