லாகூரில் நடந்த கார் குண்டுவெடிப்புக்கு தாலிபான்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அன்சர்-வா-மொஹஜிர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதன் காரணமாக, லாகூர் குண்டுவெடிப்புக்கு இந்தியர்கள்தான் காரணம் என்ற பாகிஸ்தானின் பரபரப்புக் குற்றச்சாற்று பிசுபிசுத்து விட்டது.
பாகிஸ்தானின் நியூஸ் டெய்லி என்ற நாளிதழுக்கு அன்சர்-வா-மொஹஜிர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டூஃபன் வசீர் தொலைபேசியில் கொண்டு பேசுகையில், லாகூர் கார் குண்டுவெடிப்புக்கு தங்கள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தான் அரசு நிலைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் வசீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் வசீர் மற்றும் அவரது அமைப்பில் உள்ள ஆட்கள், தாலிபான் ஆதரவாளர்கள் என்பது தெரிய வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதனன்று லாகூரில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கொல்கட்டாவைச் சேர்ந்த சதீஸ் ஆனந்த் சுக்லா உட்பட மேலும் சிலரை பாகிஸ்தான் உளவு அமைப்பு கைது செய்தது. அவர், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணிபுரிந்ததாகவும், லாகூர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் மீது பாகிஸ்தான் குற்றம்சாற்றியது.
ஆனந்த் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 இந்தியர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு நேற்று கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், லாகூர் குண்டுவெடிப்புக்கு தாலிபான் ஆதரவு அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.