மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் பாகிஸ்தானியர்தான் என்று நிரூபணம் ஆகும் வரை அவருக்கு எந்தவித சட்ட உதவியும் வழங்கப்பட மாட்டாது என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மலிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டோம் என்று மும்பை வழக்கறிஞர் சங்கம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், அஜ்மல் மீதான வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு சட்ட உதவி வழங்குமாறும், தனது சார்பில் வாதாட வழக்கறிஞர் ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துப் பாகிஸ்தான் அரசிற்கு அஜ்மல் கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்திற்கு புதன்கிழமை பதில் தரப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் உள்துறைச் செயலர் ரெஹ்மான் மாலிக், "அஜ்மல் ஒரு பாகிஸ்தானியர் என்பது நிரூபிக்கப்படும் வரை, அவருக்குச் சட்ட உதவி வழங்குவது என்ற பேச்சிற்கே இடமில்லை" என்றார்.
"தேசியத் தகவல் மற்றும் பதிவேட்டு ஆணைய விவரங்களை நாங்கள் தரவாகத் தேடிவிட்டோம். அதில் எங்குமே அஜ்மல் பற்றிய விவரங்கள் இல்லை. அஜ்மல் பாகிஸ்தானியரா என்பதே தெரியாத நிலையில், அவருக்கு வழக்கறிஞர் நியமிப்பது பற்றி எப்படிப் பேச முடியும்" என்றார் அவர்.