Publish Date: Thu, 25 Dec 2008 (17:11 IST)
Updated Date: Thu, 25 Dec 2008 (17:10 IST)
லாகூரில் நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகப் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
"கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் முனிர் என்ற சதீஷ் ஆனந்த் சுக்லா. இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர்." என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இவர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவர் என்பதால் ஆலோசிக்கப்பட்ட பிறகே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான லாகூரில் அரசு அதிகாரிகள் குடியிருப்பில் நேற்று காலை 9.20 மணியளவில் நடந்த கார் குண்டு வெடிப்பிற்குப் பெண் ஒருவர் பலியானதுடன், 4 பேர் காயமடைந்தனர்.
அதிகபட்ச பாதுகாப்பு வளையத்தில் உள்ள இந்தக் குடியிருப்பில் மூத்த அரசு அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.