இலங்கையில் மோதலினால் இடம்பெயர்ந்து வரும் மக்களின் உரிமைகளை மீறி, அவர்களைத் தேவையில்லாமல் கைது செய்வதையும், தடுத்து நிறுத்துவதையும் சிறிலங்க அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
வன்னியில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் சுமார் 3 லட்சம் பேர் சந்தித்து வரும் கடுமையான அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டிற்குச் சிறிலங்க அரசுதான் காரணம் என்றும் அவ்வமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.
வடக்கு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் மோதல் நடந்து வரும் பகுதிகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்திய ஆய்வின் அடிப்படையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 49 பக்க அறிக்கை குறித்து அவ்வமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியதாவது:
வடக்கு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் கடும் மோதலினால் இடம்பெயர்ந்துள்ள லட்சக்கணக்கான மக்கள், மனிதாபிமான உதவிகளுக்கு சிறிலங்க அரசு விதித்துள்ள தடைகளால், உணவும், பிற அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களை சிறிலங்க இராணுவத்தினர் தேவையற்றுக் கைது செய்கின்றனர். அம்மக்களை சந்தேகத்தின்பேரில் அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளனர்.
போர் நடக்கும் பகுதிகளில் இருந்து ஐ.நா. பணியாளர்களும், பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அரசு உத்தரவின்பேரில் வெளியேற்றப்பட்டு விட்டதால், லட்சக்கணக்கான மக்கள் உதவியின்றித் தவித்து வருகின்றனர். அங்கு பல ஆயிரம் குடும்பங்களுக்கு தற்காலிகத் தங்குமிடங்கள் தேவை.
சிறிலங்க அரசின் தடைகளால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுதந்திரமான கண்காணிப்பாளர்களும், பத்திரிகையாளர்களும் செல்ல முடியவில்லை. இதனால் பல உண்மையான விவரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, போர் நடக்கும் பகுதிகளில் சர்வதேசக் கண்காணிப்பாளர்களையும், மனிதாபிமான உதவிகளையும் அனுமதிக்க வேண்டும். மோதலினால் இடம்பெயர்ந்து வரும் மக்களைத் தேவையில்லாமல் கைது செய்வதையும், தடுத்து நிறுத்துவதையும் சிறிலங்க அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு பிராட் ஆடம்ஸ் வலியுறுத்தினார்.