பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் நுரையீரல் நோய் தாக்குதல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் உயிருக்குப் போராடி வருவதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜாக்சனின் ஏஜென்ட் டோஹ்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்சனின் உடல்நிலை தொடர்பாக எழுத்தாளர் இயான் ஹல்பெரின் கூறியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் சித்தரிக்கபட்டவை எனக் கூறியுள்ளதாக ஈ-நியூஸ் (E News) தெரிவித்துள்ளது.
மைக்கேல் ஜாக்சன் தற்போது பூரண உடல்நலத்துடன் உள்ளதாகவும், சிறப்பு நிகழ்ச்சி, உலக சுற்றுலா மேற்கொள்வது குறித்து முன்னணி நிறுவனங்கள், தொலைக்காட்சி குழுமத்துடன் அவர் விவாதித்து வருவதாகவும் டோஹ்மி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ரோலிங் ஸ்டோன் இதழில் புலனாய்வுப் பத்திரிகையாளராக பணியாற்றிய இயான் ஹல்பெரின் என்பவர் மைக்கேல் ஜாக்சனின் சுயசரிதையை எழுதி வருகிறார். அதில் ‘ஆல்பா 1-ஆன்ட்டிரிப்சின்’ என்னும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜாக்சன் பேச இயலாத நிலையில் உள்ளதாகவும், அவரது இடது கண் பார்வை 95 சதவீதத் திறனை இழந்து விட்டதாகவும் லண்டனில் வெளியாகும் டெய்லி எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.
இந்நோய் தாக்கியவர்கள் உயிர் பிழைப்பது அரிது என்பதாலும், ஜாக்சனுக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய முடியாத காரணத்தாலும் அவர் உயிர் பிழைக்க போராடி வருகிறார் என கூறப்பட்டிருந்த நிலையில், அது உண்மையில்லை என ஜாக்சனின் ஏஜென்ட் மறுத்துள்ளார்.