பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான தற்கொலைப்படையினரை களமிறக்க தயாராக உள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நியூஸ் டெய்லி நாளிதழுக்கு, பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரிக்-ஈ- தாலிபான் அமைப்பின் தலைவர் பைதுல்லா மசூத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில், பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து
போரிட ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் நூற்றுக்கணக்கான தற்கொலைப்படை பயங்கரவாதிகள், வெடிகுண்டுகள் நிறைந்த வாகனங்கள் ஆகியவற்றையும் பாதுகாப்புக்காக பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தாலிபான்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உண்மையான ஜிஹாத் போருக்கான நேரம் வந்துவிட்டது. உலகின் ஒரே வல்லரசு இஸ்லாமிய நாட்டை பலவீனப்படுத்த எதிரிகள் முயற்சித்து வருவதை நன்கு அறிவோம். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைகளை முஜாஹிதீன்கள் முறியடிப்போம் என்று பைதுல்லா மசூத் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அமெரிக்கா, நேட்டோ படைகளால் தேடப்பட்டு வரும் தாலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பைதுல்லா மசூத், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட முன்வந்துள்ளது, மும்பை தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.