யாழ்ப்பாணத்தில் இன்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் பணியாற்றிய 45 வயது ஊழியர் ஒருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.10 மணிக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
சுந்தரலிங்கம் கங்காதரன் என்ற அந்த ஊழியர், தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்திற்கு முன்பு, தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. அலுவலகங்கள் அமைந்துள்ள, சிறிலங்கப் படையினரால் பாதுகாக்கப்படும், உயர் பாதுகாப்பு வளையத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது.
கொல்லப்பட்ட ஊழியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், அவர் வடமராட்சி அருகில் உள்ள கரவெடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் உள்ள பிரதிநிதிகள், கங்காதரன் தங்கள் அலுவலக ஊழியர்தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.