கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த மோதலில் 100 படையினர் கொல்லப்பட்டு உள்ளதுடன், 250க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்து உள்ளனர்.
இந்த மோதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிச் செயலக இயக்குநர் எஸ். புலித்தேவன் கூறியதாவது:
கிளிநொச்சியைச் சுற்றிவளைக்கும் நோக்கத்துடன் மேற்கு, தெற்குப் பகுதிகளின் வழியாக மூன்று முனைகளிலும், குஞ்சுப்பரந்தன் பகுதியில் இரண்டு முனைகளிலும் இன்று காலை 5.00 மணிக்குச் சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதில் கிளிநொச்சிக்குத் தெற்கில் இரணைமடு நோக்கி சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் ஏற்கெனவே முறியடிக்கப்பட்டுவிட்டது.
கிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதி வழியாக சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதலும் முறியடிக்கப்பட்டுவிட்டது.
மேலும் மூன்று முனைகளில் படையினருடன் கடும் மோதல் நடந்து வருகிறது.
இன்றைய முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 250க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு புலித்தேவன் தெரிவித்துள்ளார்.