பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கவேண்டும் என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் செளதி அரேபிய மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி அமெரிக்காவில் உள்ள இந்தியர் அமைப்புகள் ஐ.நா. முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
நியூ யார்க்கில் ஐ.நா.தலைமையகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை அமெரிக்க இந்திய அறிவாளர்கள் மன்றம், பாரதிய ஜனதா கட்சியின் அயல்நாட்டு நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்தன. நியூ யார்க், நியூ ஜெர்சி, கனக்டிகட் ஆகிய இடங்களில் வாழும் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்யும் செளதி அரேபியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால், மானுடத்திற்கு எதிராக குற்றச்சாற்று வழக்குத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானை நிறுத்த வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது.
பாகிஸ்தான், செளதி அரேபியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் மட்டுமே, பயங்கரவாதத்திற்கு பல வழிகளிலும் உதவிடும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை கட்டுப்படுத்த முடியும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
‘பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வது செளதியே’, ‘ஒரு நாடாக பாகிஸ்தான் இயங்க முடியாமல் தோற்றுவிட்டது’, ‘இஸ்லாமியத் தீவிரவாதம் உலகளாவிய பிரச்சனை’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.