இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக இந்திய அரசிடம் பாகிஸ்தான் விளக்கம் கோரியுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டுக்கான இந்திய துணைத் தூதர் மன்பிரீத் வோராவிடம் பாகிஸ்தானின் தெற்காசிய விவகாரங்களுக்கான கூடுதல் செயலாளர் அளித்துள்ள குறிப்பில், வான்வழி அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விவகாரம் குறித்து இந்திய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வழங்கியுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர், லாகூர் ஆகிய 2 இடங்களில் இந்திய ராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
எனினும், பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய விமானப்படை செய்தித் தொடர்பாளரான விங் கமாண்டர் மகேஷ் உபாசானி மறுத்தது குறிப்பிடத்தக்கது.