Publish Date: Thu, 18 Dec 2008 (12:59 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
கிளிநொச்சியில் மருத்துவமனை, பொது மக்கள் குடியிருப்பு ஆகியவற்றைக் குறிவைத்து சிறிலங்க விமானப்படையினர் நடத்திய கண்மூடித்தனமான வான் தாக்குதலில் ஆறு மாதக் குழந்தை உட்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய தளமான புதினம் வெளியிட்டுள்ள செய்தியில், "கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி கட்சன் வீதியில் மக்கள் குடியிருப்புகளைக் குறிவைத்து நேற்று புதன்கிழமை காலை 7.20 மணி அளவில் சிறிலங்க விமானப்படையின் மிக்-27 வகை போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இதையடுத்து முற்பகல் 10.00 மணி அளவில் வட்டக்கச்சி மருத்துவமனைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் வட்டக்கச்சி மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவு பலத்த சேதம் அடைந்தது. அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்." என்று கூறப்பட்டுள்ளது.
சிறிலங்க விமானப்படையின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களில் 9 மாதக் குழந்தை உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.