வன்னிப் நிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கப் படையினர் யாரையும் திரும்பிப் போக விடக்கூடாது என்ற குறிக்கோளுடன் தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஆஸ்ட்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டமைப்பின் 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், "எங்களுடைய மக்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட போராட்ட அனுபவங்கள் - அவர்களின் நெஞ்சுரம் - போராட்ட வைராக்கியம் ஆகியன சவால்களை கண்டு குறைந்து போகவில்லை. மாறாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சிறிலங்க இராணுவத்தை முன்னேற விடக்கூடாது, வந்தவர்களை மீண்டும் அவர்களுடைய இடங்களுக்கு திரும்பிச்செல்ல விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் எல்லைப் படைகளாக- சிறப்பு எல்லைப் படைகளாக- பின் களமுனைகளில் பணி செய்கிறவர்களாக - எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாக - போர் வீரர்களாக உருவாகி வருவதை பார்க்க முடிகிறது.
மக்கள் எழுச்சி, மக்கள் போராட்டம், இராணுவத்திற்கு எதிரான அடக்குமுறை அரசிற்கு எதிரான மக்கள் கிளர்ச்சி என்று வரலாற்று புத்தகங்களில் படித்திருக்கலாம். ஆனால் அதை நாங்கள் நேரடியாக பார்க்கும்போது அந்த மக்களுக்கான விடுதலையை விரைவாக வென்று கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் - எழுச்சி - எங்களை இன்னமும் பல மடங்கு வேகமாகச் செயல்பட வைத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்கள் படும் அவலம்!
தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "சிறிலங்க அரசின் வான் குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள், மோசமான பொருளாதாரத் தடைகள், மருந்து தடைகள், அத்தியாவசிய உணவுத் தடைகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில், மக்களை இயற்கைச் சீற்றமும் கடுமையாகப் பாதித்துள்ளது.
கடந்த வாரமும், அதற்கு முன்பும் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமான வன்னி பெருநிலப்பரப்பு - எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி - வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு இப்படியொரு வெள்ளப் பெருக்கு ஏற்படடுள்ளதாக இங்குள்ள முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிலங்க அரசு மிகக்கொடிய பொருளாதாரத் தடையை எங்கள் மக்கள் மீது மேற்கொண்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 400 லாரிகள் அடங்கிய பொருட்கள் வன்னிப் பகுதிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 218 லாரிகளைத்தான் சிறிலங்கா அரசு வன்னிக்கு அனுப்பியுள்ளது.
அதேபோல் கடந்த நவம்பர் மாதமும் 400 லாரிகளுக்கு பதிலாக, 112 லாரிகளுக்கு மட்டுமே அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த புள்ளி விபரங்களை பார்த்தால் எங்களுடைய மக்களை பொருளாதாரத் தடையும், இயற்கைச் சீற்றமும் எந்தளவிற்கு பாதித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்" என்றார் நடேசன்.
தமிழக மக்களுக்கு வேண்டுகோள்!
தமிழக அரசியல் தலைவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தை தமிழக மக்கள் உணர்வுபூர்வமாக உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார்கள். நிறைவு அளிக்கக்கூடிய வகையில் அவர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளை - உதவிகளை - தொடர்ச்சியாக அந்தந்த நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் எடுத்துச் சொல்லி - மிக விரைவாக எங்களுடைய போராட்டத்தை அங்கீகரிப்பதற்கான எழுச்சி நிலையை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார் அவர்.
இந்தியாவிடம் ஈழத் தமிழர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு குறித்துக் கேட்டதற்கு, "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை அகற்றி, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார் நடேசன்.
இந்தியாவிற்கு சிங்கள தேசம் நண்பர்களாக இருக்க முடியுமா? என்று கேட்டதற்கு, "ஒருபோதும் இருக்க முடியாது. வரலாற்று ரீதியாக உண்மையான நண்பர்கள் நாங்கள்தான் என்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். வரலாறும் அதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. இன்று நேற்றல்ல பல ஆயிரம் வருடங்களாக இந்தியாவின் வரலாற்று நண்பர்கள் தமிழ் மக்கள்தான் என்பது இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும்" என்றார் அவர்.