Publish Date: Tue, 16 Dec 2008 (17:24 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
யாழ்ப்பாணத்தையடுத்த கிளாலியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க ராணுவத்திற்கும் இடையே நடந்த கடும் மோதலில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 120க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.
இத்தகவலை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளம் கூறியுள்ளது.
கிளாலி பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிறிலங்க தரைப்படையின் 53வது பிரிவு முன்நகர்வை மேற்கொண்டதாகவும், அவர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 10.30 மணி வரை நடந்த இம்மோதலில் சிறிலங்க படையினர் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்தாகவும், 120க்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும், பதில் தாக்குதலையடுத்து சிறிலங்க படையினர் பின்வாங்கிச் சென்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மோதலில் உயிரிழந்த சிறிலங்க படையினர் சிலரின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும், ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.