மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, அதேவேளையில் இதுபோன்றதொரு தாக்குதல் இரு நாடுகளிலும் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது அவசியம் எனக் கூறியுள்ளது.
ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடந்த மத்திய கிழக்கு நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், இந்தியா, பாகிஸ்தானுடன் அனைத்து விடயத்திலும் அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.
மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், எதிர்காலத்தில் இதுபோன்றதொரு கோரச் சம்பவம் நிகழாமல் தடுப்பதில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைவதாக கூறப்படும் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு காண்டலீசா ரைஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதேகேள்வி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம் கேட்கப்பட்ட போது, இதுபோன்ற சிறிய ஊடுருவல்கள் நடைபெறுவது சகஜம்தான். ஏனென்றால், 40 முதல் 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போர் விமானங்கள் எல்லைப் பகுதிக்குள்ளேயே பறப்பது சாத்தியமற்றது.
அதுபோல்தான் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து சென்றிருக்கலாம் என பதிலளித்தது நினைவில் கொள்ளத்தக்கது.