இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மும்பை பயங்கரவாத தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தில் குளிர்காய்கின்றனர் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு நேற்று வந்த இங்கிலாந்து பிரதமர் கோர்டன் ப்ரவுனுடன், பிரதமர் கிலானி பேசிய போது இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மும்பை தாக்குதலால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்ற சூழல், பயங்கரவாத சக்திகளுக்கும், அமைதி நடவடிக்கைக்கு எதிரானவர்களுக்குமே பயனளிக்கும் என கிலானி தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது கிலான்-ப்ரவுன் இருவரும் இருதரப்பு உறவுகள் குறித்தும் மண்டல பாதுகாப்பு நிலவரம் பற்றி விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டத்தைக் குறைக்க பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் புலனாய்வுக்கு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து ப்ரவுனிடம், கிலானி விளக்கியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.