அமெரிக்காவின் அதிபராக ஈராக்கிற்கு கடைசி அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அதிபர் புஷ்ஷின் மீது யாரும் எதிர்பார்த்திராத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியில் இன்னும் 36 நாட்கள் மட்டுமே நீடிக்க உள்ள ஜார்ஜ் புஷ், நேற்று மதியம் ஈராக் சென்றார்.
பின்னர் அந்நாட்டு அதிபர் ஜலால் தலாபானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர்களை புஷ் சந்தித்தார்.
ஈராக்கில் அமைதி ஏற்படுத்தவும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உலக நன்மை கருதியும் அமெரிக்கா போர் தொடுத்ததாக கூறினார்.
செருப்பு வீச்சு: அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு பத்திரிகையாளர் தனது காலணியை சுழற்றி அதிபர் புஷ் மீது வீசினார். இத்தாக்குதலை எதிர்பார்க்காவிட்டாலும் புஷ் சாதுர்யமாக விலகிக் கொண்டார். எனினும் அந்தப் பத்திரிகையாளர் தனது மற்றொரு காலணியையும் சுழற்றி அடித்தார். அதுவும் புஷ் மீது படவில்லை.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்தப் பத்திரிகையாளரை உடனடியாக கைது செய்து வெளியேற்றினர்.
பின்னர் தனது பேச்சைத் தொடர்ந்த புஷ், மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கவே இதுபோன்ற நடவடிக்கையில் அந்தப் பத்திரிகையாளர் ஈடுபட்டுள்ளார். என்னைப் பீதியடையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்திய இத்தாக்குதலால் நான் வருத்தமடையவில்லை. மேலும் இச்சம்பவத்தை ஆப்கானிஸ்தான் மக்களின் குரலாக தாம் கருதவில்லை என்றார்.