மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவரான அஜ்மல் அமிர் இமான் என்கிற அஜ்மல் கஸாப் எனது மகன்தான் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த அமிர் கஸாப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒருவரான அஜ்மல் அமிர் இமான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அல்ல என்று அந்நாட்டில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர்-ஈ-தயீபா, ஜமாத்-உத்-தவா மறுத்துள்ள நிலையில், அவர் எனது மகன்தான் என அமிர் கஸாப் கூறியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பஞ்சாப் மாகாணம் ஓக்ரா மாவட்டத்தின் பரிட்கோட் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பாகிஸ்தானின் டான் நாளிதழுக்கு அமிர் கஸாப் அளித்துள்ள பேட்டியில், மும்பைத் தாக்குதலில் அஜ்மல் ஈடுபட்டதால் கோபமடைந்த நான் அவரை எனது மகன் இல்லை என்றுதான் மனதளவில் கருதினேன். ஆனால் தற்போது அஜ்மல் எனது மகன்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். உண்மையும் அதுதான்.
நாளிதழ்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் அஜ்மலின் முகத்தை பலமுறை பார்த்துள்ளதால் இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
அஜ்மல் இந்தியாவில் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது தந்தை அமிர் கஸாப் அளிக்கும் முதல் ஊடகப் பேட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.பி.சி.யும், அப்சர்வர் நாளிதழும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட செய்தியில், அஜ்மலின் சொந்த ஊர் பரிட்கோட் கிராமம் என்றும், அவரது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தகவலின்படி அவரது பெற்றோர் அமிர் கஸாப்- நூர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆவேசமான மனநிலையுடன் வீட்டை விட்டு லாகூருக்கு வேலை தேடிச் சென்ற அஜ்மல், பின்னர் லஷ்கர்-ஈ-தயீபா அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அமிர் கஸாப்பிடம் கேட்கப்பட்ட போது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பக்ரீத் (ஈத்) பண்டிகையின் போது புதுத் துணிகள் வேண்டும் என்று அஜ்மல் கேட்டார். ஆனால் அப்போது என்னால் அவற்றை வாங்கித் தரமுடியவில்லை என்பதால் கோபித்துக் கொண்டு அஜ்மல் வீட்டை விட்டு வெளியேறியதாக பதிலளித்தார்.
அமிர் கஸாப்பிற்கு அஜ்மலுடன் உட்பட 3 மகன்களும், 2 மகள்களும் என மொத்தம் 5 வாரிசுகள் உள்ளனர்.