மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாக கூறி ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடைவிதித்துள்ள நிலையில், பயங்கரவாத குற்றச்சாட்டுகளை உலகின் எந்த நாடாளுமன்றத்திலும் சந்திக்கத் தயார் என அந்த அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் முகமது சயீது கூறியுள்ளார்.
லாகூரில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், மும்பை தாக்குதலில் ஜமாத்-உத்-தவா ஈடுபட்டதற்கான ஆதாரம் இந்தியா அல்லது அமெரிக்காவிடம் இருந்தால் அவை அதனை உலகின் எந்த நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கட்டும். நாங்கள் வழக்கைச் சந்திக்க தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
அவரது அமைப்பிற்கு தடைவிதித்துள்ளது குறித்து கேட்டதற்கு, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு விரைவில் கடிதம் எழுதத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் ஜமாத்-உல்-தவா அமைப்பு நிவாரணம் மற்றும் கல்வி தொடர்பான பணிகளை மட்டுமே செய்து வருகிறது என்பதை குறிப்பிடுவோம் என்றார்.
மேலும், ஐ.நா பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள தடை அறிவிப்பு, பாகிஸ்தான், இஸ்லாம், மதக்குழுக்களுக்கு எதிரான உத்தரவு என்றும் முகமது சயீத் அப்போது கூறினார்.