மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் பணியில் இந்தியாவுடன், பாகிஸ்தான் அரசு இணைந்து செயல்படுவதுடன், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்புடன் பயிற்சி அளிக்கும் மையமாக பயன்படுவதை பாகிஸ்தான் அரசு தடுக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
53 உறுப்பினர்களின் ஆதரவுடன், நியூயார்க் உறுப்பினர் கரோலின் மெக்கார்த்தி இந்த தீர்மானத்தைக் அந்நாட்டு காங்கிரஸ் சபையில் நேற்று கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டிப்பதாகவும், அதில் பலியான 200 பேரின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள நட்புறவை மேலும் மேம்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் விரும்புவதாகவும், மும்பை தாக்குதல் தொடர்பான புலனாய்வில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மும்பை தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா தன்னடக்கத்துடன் நடந்து கொள்வதை பாராட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், தனது மண்ணில் இருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தும் சக்திகளுக்கு இடமளிக்காமல் தீவிரமாக புலனாய்வு செய்து அவற்றை ஒழிக்க வேண்டும் என செனட் சபை நிறைவேற்றிய தீர்மானத்தில் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.