மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது எனக் கூறியுள்ள பென்டகன் மூத்த அதிகாரி, இதேபோல் மேலும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பென்டகனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராணுவ கூட்டுப்படைகளின் தலைவர் மைக் முல்லென், மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதட்டம் முற்றிலுமாக தணிந்து விட்டதா என நான் தற்போது கூற முடியாது.
மும்பை தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட பீதியின் தன்மையும், அத்தாக்குதலை நடத்தியவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்ற உறுதியும் இந்திய மக்களிடையே அதிகமாக உள்ளது.
இதேபோல் பாகிஸ்தானிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போக்கு காணப்படுவதை உணர்ந்துள்ளேன்.
இவ்விடயத்தில் இந்தியா தன்னடக்கமான முறையில் நடந்து கொண்டதற்கு தாம் நன்றிக்கடன் பட்டுள்ளதாக கூறிய முல்லென், லஷ்கர்-ஈ-தயீபாவின் முக்கிய தலைவர் உட்பட மேலும் பல தீவிரவாதிகளை பாகிஸ்தான் கைது செய்துள்ளது எனக்கு ஊக்கமளிக்கிறது என்றார்.
இவை பாராட்டத்தக்க நடவடிக்கைகள். இதேபோல் மேலும் பல நடவடிக்கைகளை பாகிஸ்தான் அதிகாரிகள் கூடிய விரைவில் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.
மும்பை தாக்குதலின் பின்னணி, அதன் இலக்கு பற்றி முழுமையாக நாம் அறிந்து கொள்ள சிறிது காலம் பிடிக்கும் என்றாலும், அதிநவீன ஆயுதங்கள் இல்லாமலேயே மும்பையை தங்கள் பிடிக்கும் 2 நாட்கள் வைத்திருந்ததன் மூலம், இரு அணு ஆயுத நாடுகளிடையே போரை ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயன்றதை மறக்க முடியாது என்றும் முல்லென் கூறினார்.