தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-ஈ-தயீபாவின் துணை அமைப்பாக கருதப்படும் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடைவிதித்ததுடன், அதனை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
மேலும், லஷ்கர்-ஈ-தயீபாவின் முக்கிய தலைவர்களான ஹஃபீஸ் சயீத், ஜகி-உர்-ரெஹ்மான் லக்வி, ஹாஜி முகமது அஷ்ரஃப், ஜகி-உர்-பஹாஸிக் ஆகியோர் பயங்கரவாதிகள் என ஐ.நா பாதுகாப்பு சபை கூறியுள்ளது.
மும்பை தாக்குதலுக்கு பின்னணியில் செயல்பட்ட லஷ்கர்-ஈ-தயீபாவின் துணை அமைப்பான ஜமாத்-உத்-தவாவை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்தியா வலியுறுத்தி இருந்தது. அந்த அமைப்பின் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால், நேரடித் தாக்குதலில் ஈடுபட நேரிடும் என்றும் இந்தியா எச்சரித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
ஐ.நா.வின் இந்த நடவடிக்கையின் மூலம் ஜமாத்-உத்-தவா அமைப்பின் வங்கி கணக்குகள், உறுப்பினர்களின் நடமாட்டம் அனைத்தும் முடக்கப்படும். மேலும், அந்த அமைப்பு மற்றும் பயங்கராவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் அரசு தள்ளப்பட்டுள்ளது.