மும்பை மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால் 'எதிர்பாராத கடும் விளைவுகளை' சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க தேசிய வானொலிக்கு அந்நாட்டு அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் அளித்துள்ள பேட்டியில், "மும்பை தாக்குதல்கள் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகள் தனது மண்ணை பயன்படுத்தாதவாறு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 'எதிர்பாராத கடும் விளைவுகளை' சந்திக்க நேரிடும்.
மும்பை தாக்குதல்களில் அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதால், இதை வலியுறுத்துவதில் அமெரிக்காவிற்கு குறிப்பிட்ட பொறுப்பு உள்ளது. பயங்கரவாதிகளால் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்குமே அச்சுறுத்தல் உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்" என்றார்.
மும்பை தாக்குதல்களுக்கு காரணம் என்று கருதப்படும் லஸ்கர் ஈ தயீபா அமைப்பின் இரண்டு முக்கிய தலைவர்களான ஜாகீர் ரெஹ்மான் லாக்வி, ஸரார் ஷா ஆகியோர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள செய்தி குறித்து கேட்டதற்கு, சில முக்கிய நடவடிக்கைகள் பாகிஸ்தான் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தான் கருதுவதாக அவர் கூறினார்.
"பாகிஸ்தானில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை கண்டறியவும், சரிபார்க்கவும் நாங்கள் கடுமையாக பணியாற்றி வருகிறோம், அதே நேரத்தில் பாகிஸ்தான் அரசு சில சாதகமான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிகிறது. இந்திய - பாகிஸ்தான் உறவுகள் சாதகமான திசையில் செல்வதை விரும்பாத சிலர், இந்த நடவடிக்கைகளை நிறுத்த விரும்புகின்றனர்" என்றும் அவர் கூறினார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையில் போர் மூளூம் சூழல் உருவானதைக் குறிப்பிட்ட அவர், தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன என்றார்.
பாகிஸ்தானில் சட்டப்பூர்வமான குடிமக்கள் அரசு அமைந்துள்ளது. மும்பை மீதான தாக்குதல் நடந்த போது அந்நாட்டு அயலுறவு அமைச்சர் இந்தியாவில் இருந்துள்ளார். எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சில முன்னேற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன் என்றார் காண்டலீசா ரைஸ்.