மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய லஸ்கர் ஈ தயீபா அமைப்பின் துணை அமைப்பான ஜமாத்- உத் தவா அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான், ஐ.நா. பாதுகாப்பு அவை கேட்டுக்கொள்ளுமானால் அவ்வமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்யத் தயார் என்று உறுதியளித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு அவையில் பயங்கரவாதம் மீதான விவாதத்தில் பேசிய மத்திய அயலுறவு இணை அமைச்சர் இ. அகமது, மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் எல்லை தாண்டிய சக்திகளின் உதவியுடன் நடத்தப்பட்டுள்ளது என்றார். மேலும், தனது மண்ணில் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தவறினால் "தனது குடிமக்களைப் பாதுகாக்க இந்தியா என்ன வேண்டுமானாலும் செய்யும்" என்று எச்சரித்தார்.
மும்பை மீது நவம்பர் 26 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களை முக்கியத்துவம் தந்து குறிப்பிட்ட அமைச்சர் அகமது, "இது பயங்கரவாதத்தின் புதுவகையான, அபாயகரமான வெளிப்பாடு" என்றார். மேலும், பயங்கரவாதிகளை முறியடிக்க பாகிஸ்தான் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் போதாது என்றார் அவர்.
இதையடுத்துப் பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தான் தூதர் அப்துல்லா ஹூசைன் ஹரூன், ஐ.நா. பாதுகாப்பு அவை கேட்டுக்கொள்ளுமானால் ஜமாத்- உத் தவா அமைப்பிற்குத் தடை விதிப்பதுடன், அதன் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையையும் பாகிஸ்தான் அரசு எடுக்கும் என்று பாதுகாப்பு அவைக்கு உறுதியளித்தார்.
மேலும், தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் லஸ்கர்- ஈ தயீபா அமைப்பின் பயிற்சி முகாம்களையோ அல்லது அதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளையோ பாகிஸ்தான் அனுமதிக்காது என்றும் சர்வதேசச் சமூகத்திற்கு அவர் உறுதியளித்தார்.
அப்போது இடைமறித்துப் பேசிய அமைச்சர் அகமது, கடந்த இருபது ஆண்டுகளாக எல்லை தாண்டிய சக்திகளின் உதவியுடன் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களின் இலக்காக இந்தியா இருந்து வருகிறது என்று குறிப்பிட்டதுடன், அரசுகளின் அரசியல் ஆதாயங்களுக்குப் பயங்கரவாத அமைப்புக்கள் உதவுகையில், பயங்கரமான கூட்டணி உருவாகிவிடுகிறது என்றும், பயங்கரவாத இயந்திரம் (terror machine) உருவாக்கப்படுகிறது என்றும் எச்சரித்தார்.
மேலும், "ஜமாத் உத் தவா அமைப்பின் செயல்பாட்டை நிறுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் பாகிஸ்தான் அரசிற்கு உள்ளது" என்றார் அகமது.