மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய லஸ்கர்-ஈ-தயீபா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் ரெஹ்மான் லாக்வி, ஸரார் ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டது விசாரணைக்காகவே என்று பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
ஆனால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெய்ஸ்-ஈ-மொஹமது அமைப்பின் நிறுவனர் மௌலானா மசூத் அசார் குறித்த அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்கள் மும்பை தாக்குதல்களில் ஈடுபட்டவர்களா என்ற கேள்வியை புறம் தள்ளிய கிலானி, இந்திய உளவு அமைப்புகள் தங்களுடன் கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொண்டபிறகு பாகிஸ்தான் அதன் வழியில் விசாரணையை நடத்தும் என்றார்.
மேலும் விசாரணை முடியும் முன்பு இது குறித்து தான் எந்தக் கருத்தையும் கூறப்போவதில்லை என்றார் அவர்.
லாக்வி, ஸாரார் ஷா பற்றிய கேள்விக்கு, அவர்கள் விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய கிலானி, தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் மேலும் சிக்கினால் விசாரணை அதன் வழியில் நடக்கும் என்றார்.
இந்த இருவரையும் இந்தியாவுடன் இணைந்து விசாரணை செய்வது குறித்தும் பாகிஸ்தான் பரிசீலித்து வருவதாக அயலுறவு அமைச்சர் குரேஷி செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.
ஜமாத், லஸ்கர் பயங்கரவாதிகள் இருபது பேரை பாகிஸ்தான் இதுவரை கைது செய்துள்ளது.