பாகிஸ்தானில் இருந்து செயல்படும் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஜமாத் உத்-தவா அமைப்பை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கேட்டுக் கொண்டால், தடை செய்யத் தயார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
மும்பையில் நட்சத்திர விடுதிகளில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பிற்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
லஷ்கர்-இ-தோய்பா அமைப்பின் துணை அமைப்பான ஜமாத் உத்-தவா அமைப்புதான் மும்பை தாக்குதலை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய உள்துறை இணையமைச்சர் இ. அகமது, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இதற்கான கோரிக்கையை வைத்துள்ளார்.
இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், ஜமாத் உத் - தவா அமைப்பை தாங்கள் தடை செய்வோம் என்று ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் தெரிவித்துள்ளார்.