தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ள ஜெய்ஸ் ஈ மொஹம்மது இயக்கத் தலைவன் மெளலானா மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின் மூளையாகச் செயல்பட்டுள்ள மசூத் அசார் இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவன்.
கடந்த 1999இல் காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கந்தஹாருக்கு கடத்தப்பட்டபோது, அதிலிருந்த பயணிகளை விடுவிப்பதற்காக பயங்கரவாதிகளின் கோரிக்கையை ஏற்று, மசூத் உள்பட மூன்று பயங்கரவாதிகளை இந்தியா விடுவித்தது.
இதையடுத்துப் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ள மசூத் அசார், கடந்த நவம்பர் 26 அன்று மும்பை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் இருந்தான் என்று கருதப்படுகிறது. எனவே, அவனைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பஹவல்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அவன் சிறை வைக்கப்பட்டு உள்ளதாக 'தி நியூஸ்' நாளிதழ் செய்தி கூறுகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை.