மும்பை பயங்கரவாதத் தாக்குல்களுக்குக் காரணமான 'நாடு சாரா சக்திகளுக்கு' எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள பாகிஸ்தான் அதிபர் ஆஷிஃப் அலி சர்தாரி, புண்படுத்த வேண்டாம் என்றும், அவசரப்பட வேண்டாம் என்றும் இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தனது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் 'நாடு சாரா சக்திகள்' அனைவரும் 'பயங்கரவாதிகளாகவும் கொலைகாரர்களாகவும்'தான் கருதப்படுவார்கள் என்று கூறியுள்ள சர்தாரி, 'இதுபோன்ற கொடூர நடவடிக்கைகளில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து, கைது செய்து, விசாரணை நடத்தி, தண்டிக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நியூயார்க் டைம்ஸ் இதழில் எழுதியுள்ள உணர்ச்சிபூர்வமான கட்டுரையில், "மும்பை தாக்குதல்கள் இந்தியாவிற்கு எதிரானது மட்டுமல்ல, பாகிஸ்தானின் புதிய ஜனநாயக அரசிற்கும், புது டெல்லியுடன் நாங்கள் துவங்கியுள்ள அமைதிப் பேச்சிற்கும் எதிரானது" என்று கூறியுள்ளார்.
"நாடு சாரா சக்திகளால் பாகிஸ்தானின் பாதையை மாற்றிவிட முடியாது. அவர்களால் பாகிஸ்தான் அரசுடன் எந்தவிதத் தொடர்பையும் உண்டாக்க முடியாது. நாங்கள்தான் அவர்களின் (பயங்கரவாதிகளின்) குறிக்கோள், நாங்கள் எப்போதும் அவர்களின் இலக்கு" என்று கூறியுள்ள சர்தாரி, அவரது மனைவியும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்ததுடன், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் வலி தனக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும், இதுபோன்ற தாக்குதல்களில் தொடர்புடைய சக்திகளை கண்டுபிடித்து, கைது செய்து, விசாரணை நடத்தி தண்டிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் அவசரப்பட்டு 'வெறுக்கத்தக்க பழிகளை'யும், 'புண்படுத்தும் கருத்துக்களை'யும் கூற வேண்டாம் என்று இந்தியாவிற்கு சர்தாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.