Publish Date: Sun, 07 Dec 2008 (18:22 IST)
Updated Date: Sun, 07 Dec 2008 (18:21 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் நடவடிக்கை எடுக்க இந்தியா விதித்த கெடுவிற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
'இந்தியா கூறியபடி 48 மணி நேரத்திற்குள், மும்பை மீது நவம்பர் 26 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்தியா தெரிவித்துள்ளவர்களை கைது செய்யவும், லஸ்கர் -இ தயீபா இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது' என்று 'வாஷிங்டன் போஸ்ட்' இதழில் செய்தி வெளியாகியிருந்தது.
பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி வெளியாகியிருந்த அந்தச் செய்தியில், லஸ்கர் இயக்கம் மீது நடவடிக்கை எடுப்பதோடு, லஸ்கர் கமாண்டர் ஜாகி உர் - ரஹ்மான் லாக்வி, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. யின் முன்னாள் தலைவர் ஹமித் குல் உள்ளிட்ட 3 பேரையாவது கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அதிபரின் பேச்சாளர் பர்ஹத்துல்லாஹ் பாபர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஊடகங்கள் வெளிடும் கருத்துக்கள், உணர்ச்சியூட்டும் செய்திகள் ஒவ்வொன்றுக்கும் நாங்கள் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது" என்று கூறினார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவிற்கு முழுமையாக ஒத்துழைப்பது என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.