Publish Date: Sun, 07 Dec 2008 (14:03 IST)
Updated Date: Sun, 07 Dec 2008 (14:02 IST)
அபு தாபியில் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட இந்திய டாக்சி ஓட்டுநர்கள் ஊதிய உயர்வு கோரிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறைவான ஊதியத்தால் உணவுத் தேவைகளைக்கூடத் தங்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள அவர்களில், 32 பேர் தங்களைத் தாயகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக அல் கஜால் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் அபி தாபி டாக்சி ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த மாதம் அளித்துள்ள மனுவில், ஒவ்வொரு நாளும் தாங்கள் இலக்கை பூர்த்தி செய்வதற்காக 16 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றுமாறு வற்புறுத்தப்படுவதாகக் கூறியுள்ளனர்.
தங்களுக்கு தினமும் 1200 திர்ஹாம் (ரூ.15,000) ஊதியம் பேசப்பட்டதாகவும், ஆனால், 1060 திர்ஹாம் (ரூ.13,000) வரை கழிக்கப்பட்டு மிகவும் சொற்பமான ஊதியம்தான் வழங்கப்படுகிறது என்று அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர். மேலும், இந்தியாவில் தாங்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டபோது ஒவ்வொருவரும் ரூ.1 லட்சம் வரை அல் ஜராஃபா குழுமத்திற்குக் கட்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
"நாங்கள் அனைவரும் மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். வேலைக்குச் சேருவதற்காக வாங்கிய வங்கிக் கடனைக் கட்டுவதற்குகூட எங்களுக்கு வழியில்லை. எனவே எங்களுக்குப் பேசியபடி 1200 திர்ஹாம் ஊதியம் வழங்கப்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.