இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை என அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பி.டி.ஐ. வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
சி.என்.என் தொலைக்காட்சிக்கு சர்தாரி அளித்துள்ள பேட்டியில், மும்பை தாக்குதலைத் தொடர்ந்து, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உட்பட இந்தியாவால் தேடப்பட்டு வரும் 20 பயங்கரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆனால் அவர்கள் பாகிஸ்தானில் உள்ளதாகத் தெரிந்தால் நாங்களே (பாக். அரசு) அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தூக்கிலிடுவோம் என்றார்.
இதேபோல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிருடன் சிக்கிய ஒரு பயங்கரவாதியான அஜ்மல், பாகிஸ்தானைச் சேர்ந்தவன்தான் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரங்களை இந்தியா தங்களிடம் இன்னும் அளிக்கவில்லை என்றும், அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தானா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு என்றும் சர்தாரி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 20 பயங்கரவாதிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தியிருந்த நிலையில், சர்தாரி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.