அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள பாரக் ஒபாமா, தெற்கு ஆசியப் பகுதிகளில் இயங்கி வரும் பயங்கரவாதக் குழுக்கள் அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், இந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிக்க முழுவீச்சுடன் செயல்படப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது நாட்டு தேசிய பாதுகாப்புக் குழுவை அறிவித்த ஒபாமா, பயங்கரவாதிகளை முறியடிக்க ராணுவம் மட்டுமல்லாது, பொருளாதார, அரசியல் மற்றும் ராஜதந்திர ஆற்றல்களையும் முழு வீச்சுடன் பயன்படுத்தப்போவதாக உறுதியளித்துள்ளார். இது போன்ற நடவடிக்கை, அமெரிக்காவிற்கு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திற்கும் அமைதியை ஏற்படுத்துவதாய் அமையும் என்றார்.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து தனது கவலைகளை வெளியிட்டுள்ள ஒபாமா, தெற்காசியப் பகுதி கவலையளிக்கும் ஒரு பகுதியாக மாறி வருகிறது என்றார்.
ஆப்கானிலும், தெற்காசியாவின் பிற பகுதிகளிலும் பயங்கரவாதிகள் பாதுகாப்பாக இயங்கி வருவது அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு எதிரான முக்கியமான ஒரே அச்சுறுத்தலாக திகழ்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
"எங்களது ஆதாரங்களையெல்லாம் திரட்டி, அல்கய்டா, ஒசாமா பின்லேடன், அமெரிக்க மக்களை குறி வைக்கும் பிற பயங்கரவாத சக்திகளை ஒழிக்க கவனம் முழுவதையும் செலுத்துவோம்" என்று கூறியுள்ளார் ஒபாமா.
மும்பை தாக்குதல் குறித்து அவர் குறிப்பாக எதுவும் கூறாவிட்டாலும், தாக்குதல் நடத்தியவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதில் அமெரிக்கா இந்தியாவிற்கு தனது முழு ஆதரவையும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.