இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் ஏற்படும் பட்சத்தில், எல்லைக்குப் படைகளை நகர்த்தினால் அது பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும் என அந்நாட்டு ராணுவத் தளபதி கயானி கூறியுள்ளார்.
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் மீது இந்தியா போர் தொடுக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக செய்திகள் நேற்றிரவு வெளியாகின. இரு நாட்டு எல்லையில், இந்தியா தனது படைகளை குவிக்கத் துவங்கியுள்ளதாகவும் கூறப்பட்டன.
எனவே, பாகிஸ்தான் அரசும் பதில் நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளது. ஒருவேளை அந்நாட்டு அரசு எல்லையில் படைகளை குவிக்கத் துவங்கினால், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என பர்வேஸ் கயானி அரசியல் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் ராணுவ வீரர்களை எல்லையில் குவிப்பதால், அவர்களுக்கு எதிரான போரில் பின்னடைவு ஏற்படும் என்பதே கயானியின் கருத்து.
கடந்த சனிக்கிழமையன்று அந்நாட்டு அதிபர் சர்தாரியை, தளபதி கயானி 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது எந்தவித நெருக்கடியான சூழலையும் சந்திக்க பாகிஸ்தான் ராணுவம் எப்படி தயார் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி கயானி அவரிடம் விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் பாகிஸ்தானின் “தி நியூஸ் டெய்லி” நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியாவுடன் போர் ஏற்படும் பட்சத்தில், சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படுவோம் என அந்நாட்டு பயங்கரவாத குழுக்கள் அரசை தொடர்புகொண்டு பேசியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், படுபாதகச் செயல்களில் ஈடுபட்ட பைதுல்லா மஹ்சூத், மௌலானா ஃபைசுல்லாஹ் ஆகியோரை தேசப்பற்று மிக்கவர்கள் என்று அறிவித்தால் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படுவோம் என்றும் பயங்கரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
பர்வேஸ் முஷாரஃப் ஆட்சியின் போது பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் பைதுல்லா மஹ்சூத் முக்கிய குற்றவாளி என கூறப்பட்டார். இதேபோல் ஃபைசுல்லாஹ் அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவர்களை மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தேசப்பற்று உள்ளவர்களாக மாற்றியுள்ளது என்றும் அந்நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.