மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாக பாகிஸ்தானின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவரை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், தற்போது ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மட்டும் அனுப்பி வைக்கப்படுவர் எனக் கூறியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் நடத்திய அவசர ஆலோசனையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்துப் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பேச்சாளர் ஜாகித் பஷீர் கூறுகையில், "மும்பை தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஒத்துழைப்பு தொடர்பாகவும், சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் ஐ.எஸ்.ஐ. உறுப்பினர் ஒருவர் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார் எனத் தெரிவித்தார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பாக ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது சுஜா பாஷாவை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த வேண்டுகோளைப் பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஏற்றுக் கொண்டதாக ஜாகித் பஷீர் நேற்று தெரிவித்திருந்தார்.
ஆனால் நேற்றிரவு நடந்த ஆலோசனைக்குப் பிறகு பாகிஸ்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு ஐ.எஸ்.ஐ உறுப்பினரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளது.